India
நிலச்சரிவில் தமிழர்கள் பலி: “மீட்புப்பணிகளை தீவிரப்படுத்துக; இழப்பீடு வழங்குக”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
கேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ம் தேதி இரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இப்பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் துயருற்றள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளவர்கள் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
"கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி - 29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் - தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி - தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து - உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் - மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!