India
“தமிழகமும், கேரளமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற வேண்டும்!” - ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!
விபத்து, இயற்கைப் பேரிடர்கள் என்பவை எதிர்பாராதவை என்றாலும், மனித இதயங்களில் இரக்கமும், மனிதநேயமும் இயல்பாகவே, மொழி, இனம், நாடு எல்லை கடந்து மேலோங்குவது இயல்பான ஒன்று என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
“கேரளத்தில் நேற்று (7.8.2020) நடைபெற்ற இரண்டு பெரும் சோக நிகழ்வுகள் மிகுந்த துயரத்தையும், வேதனையையும் தரக்கூடியவையாகும்.
விமான விபத்து!
நேற்றிரவு 7.30 மணியளவில், துபாயிலிருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும்போது இரண்டாக உடைந்தது; இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலியானார்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் அனைவரும் கரோனா தொற்று காரணமாக துபாயில் சிக்கிக் கொண்டு வர இயலாமல் தவித்த நிலையில், அவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்ட விமானம், அதுவும் தரையிறங்கும் நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான விபத்து என்பது நெஞ்சை உலுக்கும் செய்தியாகும்.
விமானம் தரையிறங்கி, ஓடுபாதையில் ஓடும்போது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டது.
பலத்த மழை பெய்த நிலையில், ஓடுபாதையில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. மீட்புக் குழு விரைந்து தமது பணியின் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நிவாரணங்கள் தேவை!
நம்பிக்கையோடு தாயகம் திரும்பிய வர்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? என்ன செய்வது? எப்படி நிகழும், எப்போது நிகழும் என்று தெரியாததற்குப் பெயர்தான் ‘விபத்து’ என்பதாகும்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நிவாரணங்கள் தேவை!
தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலி!
அதுபோலவே, நமது நெஞ்சங்களை உறைய வைக்கும் மற்றொரு துன்பச் செய்தி. அதே கேரளத்தில் மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 வீடுகள் இடிந்து நாசமாயின. அங்கு தூங்கிக் கொண்டிருந்த 22 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியானது மிகப்பெரிய கொடுமை அல்லவா?
மூணாறிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமூடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக் கப்பட்ட தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இவர்கள். தூத்துக்குடி பகுதியிலிருந்து இப்பகுதிக்கு வேலைக்குச் சென்ற தமிழர்களாக இவர்கள் இருக்கக் கூடும்!
மேலும் நிலச்சரிவில் சிக்கிய 42 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மக்கள் நல அரசு
கேரள மாநிலம் தொடர்ந்து எத்தனையோ புயல், வெள்ளம், கரோனா மற்றும் இத்தகைய விபத்துகளைச் சந்தித்து வருவதும் - அதனைத் துணிவுடன் அவ்வரசு எதிர்கொண்டு ஒரு மக்கள் நல அரசாக நடந்துகொள்ளுவதும் ஆறுதல் அளிக்கத்தக்க நடவடிக்கையாகும்!
இயற்கைப் பேரிடர்கள் எதிர்பாராதவை என்றாலும், மனித இதயங்களில் இரக்கமும், மனிதநேயமும் இயல்பாகவே, மொழி, இனம், நாடு எல்லை கடந்து மேலோங்குவது இயல்பான ஒன்று!
தமிழகமும் - கேரளமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற வேண்டும்!
உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசும் சரி, கேரள அரசும் சரி போதிய உதவிகள், நிவாரணம் தர ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு கடமையாற்ற வேண்டிய தருணம் இது!
மரணமடைந்த அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்! காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விழைகிறோம்!”
Also Read
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!