India

“அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள் : மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா?” - உச்சநீதிமன்றம் கேள்வி!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் லாக் அப் மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் மரணங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைகளை சுட்டிக்காட்டி, திலீப் பாசு என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 2017-2018 ஆண்டில் 148 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகார்களின் அடிப்படையில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற வழக்கு பதிவு செய்யவும், 38 வழக்குகள் தொடர்பாக துறைசார் விசாரணைக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைந்துள்ளது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 2.2% காவல் மரணங்கள் குறித்து மட்டுமே மாநில அரசுகள் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 70 காவல் மரண வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

மேலும், மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “மருத்துவப் படிப்பில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்” : உச்சநீதிமன்றம்!