India

சடலமாய் எரிக்கப்பட்டவர் மீண்டு வந்தார்; மூன்றே நாளில் மீளாமல் போனார் - மராட்டியத்தில் கொரோனா துயரம்!

கொரோனாவால் என்னென்ன நடக்குமோ என நாடு முழுவதும் மக்கள் திக்கற்றுப் போய் நிற்கிறார்கள். அவ்வளவும் வேதனைகளும் சோதனைகளும்தான். ஆள் மாறாட்டத்தால் இறந்துபோகிறவர்களின் உடலை வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரும்போது இடம் தவறிப்போவது அவ்வப்போது நிகழும். அப்படியொரு இன்பமும் துன்பமுமான ஓர் அதிர்ச்சி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

மராட்டியத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜனார்த்தன் சோனாவானே. 67 வயதான இவருக்கு கொரோனா தொற்றி, தானே நகராட்சி நிர்வாகத்தால் கால்வாவில் நடத்தப்படும் தானே கோவிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3ஆம் தேதி காலை 6.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து ஜனார்த்தனின் மகன் சந்தீப்புக்கு தொலைபேசி அழைப்பு சென்றது. அவருடைய தந்தை கொரோனாவால் இறந்துவிட்டார் எனக் கூறியதுடன், கொரோனா பாதுகாப்பு உறைகளுடன் சடலத்தையும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் கொரோனா விதிமுறைகளை மிகவும் சரியாகக் கடைப்பிடித்து இறுதிக்கிரியையைகளைச் செய்துமுடித்தனர்.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரை இழந்ததில் அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த வேளையில் தொலைபேசியில் சந்தீப் சோனாவலியிடம் பேசிய ஒரு குரல், ‘மருத்துவமனையிலிருந்து பேசுகிறோம். உங்களின் தந்தை உயிரோடு இருக்கிறார்’ எனக் கூறவும், யாரோ விளையாடுகிறார்கள் என அவர் விட்டுவிட்டார். மறுநாள் காலையில், அவரின் தந்தை சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்ற சந்தீப்புக்கு, அங்கு கண்ட காட்சியை நம்பமுடியவில்லை.

ஆம், அவருடைய தந்தை ஜனார்த்தன் சோனாவானே தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரோடு இருந்திருக்கிறார். இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனவர், உடனே அந்த மகிழ்ச்சியான தகவலை குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டார். சோகத்திலிருந்த மொத்த குடும்பமும் அதிர்ச்சிக்கு உள்ளானபோதும் கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்தக் குடும்பத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்ட இதேசமயத்தில், இன்னொரு குடும்பம் இழக்காததை இழந்த கடும் சோகத்தில் இருந்தது. ஜனார்த்தனுடைய உடல் என எரியூட்டப்பட்ட 71 வயது பால்சந்திர கெய்க்வாட் என்பவரின் குடும்பம்தான், அது. அவருடைய மருமகன் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்குப் பேசுகையில், ” என் மாமனார் பால்சந்திர கெய்க்வாட்டை ஜூன் 29 அன்று இரவு 10 மணியளவில் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. பிறகு, கடந்த 3ஆம் தேதி இறந்துவிட்டார். அன்று ஒரே நாளில் அந்த மருத்துவமனையில் நான்கு பேர் இறந்துவிட்டனர்; என் மாமனாரின் உடலை வேறு யாருடைய குடும்பத்திடமோ ஒப்படைத்துவிட்டார்கள். அவர்கள் அவருக்கு இறுதிச்சடங்குகள்கூட செய்துவிட்டார்கள். மருத்துவமனைப் பணியாளர்கள் ஏதோ குழப்பம் நடந்துவிட்டதென அலட்சியமாகச் சொல்கிறார்கள்.” எனக் குமுறினார்.

மருத்துவமனை நிர்வாகம் பிரச்னை பெரிதாகிவிடாமல் தடுக்க முனைப்பு காட்டுகிறது என்பது அவரின் குற்றச்சாட்டு. ஜனார்த்தனின் மகன் சந்தீப் சொல்வதும் இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. ” மெய்யாலுமே அது அதிர்ச்சியாக இருந்தாலும் என் அப்பாவை உயிரோடு பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. அவரை அடையாளம்காட்டச் சொன்னார்கள். ஆங்கிலம் தெரியாத என்னிடம் ஏதோ ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தில் கையொப்பம் வாங்கிக்கொண்டார்கள்.” எனக் கூறியிருக்கிறார், சந்தீப்.

பால்சந்திர கெய்க்வாட்டின் உடல் காணாமல் போனதாக போலீசிடம் புகார் அளித்திருக்கிறோம் என சாவதானமாகச் சொன்ன மருத்துவமனையின் பொறுப்பு நிர்வாகி, துறைரீதியான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது என ஊடகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் ஜூலை 8 விடியாத பொழுதில் மருத்துவமனையிலிருந்து சந்தீப்புக்கு தொலைபேசி அழைப்பு..” உங்கள் அப்பா இறந்துவிட்டார்.” என அவர்கள் சொன்னதை, அவரால் நம்பவும் முடியவில்லை. தகவல் சொன்னவரிடமே அவர் கூறியது உண்மைதானா என உறுதிப்படுத்திக்கொண்டார்.

உண்மையில் இந்த முறை, ஜனார்த்தன் சோனாவானே உயிரிழந்துவிட்டார்தான். அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி, மூன்று நாள்களுக்குள் அற்பமாகப் பறிக்கப்பட்டுவிட்டது, கொரோனாவால்!

Also Read: சுகாதார வசதிகளில் படுமோசமான நிலை : “இதுதான் குஜராத் மாடல்” - அம்பலப்படுத்திய பிபிசி!