India
“கொரோனாவுக்கு இந்தியாவிலேயே முதல் தடுப்பூசி” : சாதித்த தமிழர் - யார் இந்த கிருஷ்ணா?
கொரோனா தொற்று உலகையே பந்தாடி வரும் நிலையில், உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் COVAXIN என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது ஏற்கெனவே விலங்குகளிடையே பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து மனிதர்களிடையேயான சோதனைக்கு டி.சி.ஜி.ஐ அனுமதி அளித்திருந்தது.
ஆகஸ்ட் 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக நடந்தாலும் அதில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள 'பாரத் பயோடெக்' நிறுவனத்தை நிறுவியவர் கிருஷ்ணா எல்லா. தமிழரான இவர் திருத்தணி அருகே ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கிருஷ்ணா எல்லா, பட்டப்படிப்பை முடித்ததும் 'பேயர்' என்ற மருந்து நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர், 'ஃப்ரீடம் ஃப்ரம் ஹங்கர்' எனும் உதவித்தொகை பெற்று அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். ஹவாய் பல்கலையிக்கழகத்தில் முதுகலை பட்டமும், விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் முடித்தார்.
பின்னர் 1996ல் ஐதராபாத்தில் சிறிய பரிசோதனை கூடத்ததை நிறுவியவர், மிகக் குறைந்த விலையில் ஹெபடைடிஸ் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். மற்ற நிறுவனங்கள் அந்த மருந்துக்கு 40 டாலர் என விலை நிர்ணயிக்க, வெறும் ஒரு டாலருக்கு மருந்து கிடைக்கும் என அறிவித்து ஆச்சரியம் கொடுத்தார்.
கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம்தான், உலகளவில் ஜிகா வைரஸுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. 1996ல் ஆந்திர மாநில அரசு இவருக்கு, உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அனுமதி அளித்து, நிலமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்துறையில் பல்வேறு மகத்தான பணிகளைச் செய்த தமிழரான கிருஷ்ணா, பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், தனது நிறுவனத்தின் மூலம் தடுப்பூசி கண்டுபிடித்து பெருமை தேடித் தந்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!