உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்க சர்வதேச நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் வெகு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
முழுத் தீர்வு ஏதும் கிடைக்காமல் இருந்தாலும் தற்காலிகமாக உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவதற்கான மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதில், பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து COVAXIN என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளன. இது ஏற்கெனவே விலங்குகளிடையே பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து மனிதர்களிடையேயான சோதனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்திருந்தது.
மேலும், ஜூலை 7ம் தேதிக்குள் சோதனையை நடத்தி வெற்றிகரமானால் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பொது சுகாதார பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் என ஐசிஎம்ஆர் அந்நிறுவனத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.
இந்த தகவல் நாட்டு மக்களிடையே பெரிதும் பரபரப்பாகவும் ஆச்சர்யாமாகவும் பேசப்பட்டு வந்த நிலையில், மூத்த மருத்துவ நிபுணர்கள் பலர் இது முற்றிலும் சாத்தியமற்றது என கருத்து தெரிவித்துள்ளனர். பல செயல்முறை படிநிலைகள் உள்ள போது ஆகஸ்ட் 15ம் தேதி இலக்காக நிர்ணயித்திருப்பது முற்றிலும் நம்பத்தகுந்ததாக இல்லை.
இவ்வளவு வேகமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என உலகில் எதுவும் இல்லை என புனேவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவன பேராசிரியர் வினீதா பால் கூறியுள்ளார். அதேபோல, சோதனை முறையிலான பணிகளே நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜூலை 7ம் தேதி முதல் மருத்துவ சோதனைக்கான ஆட்சேர்ப்பு எப்படி தொடங்கப்பட்டது?
ஒரே மாதத்திற்கும் தடுப்பூசி சோதனை முடிவடைவது என்பது சாத்தியமில்லாதது. மருத்துவ பரிசோதனை வெற்றியை முன்கூட்டியே ஐ.சி.எம்.ஆர் தீர்மானித்துள்ளதா என பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் அனந்த் பன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தடுப்பூசிகளுக்கான சோதனை வெறிகரமாக கருதினாலும் அதில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசியை செலுத்தி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கண்காணிக்கப்பட வேண்டும்
இப்படி பல்வேறு படிநிலைகள் இருக்கும் வேளையில் எப்படி ஆகஸ்ட் 15ம் தேதி கோவாஸின் தடுப்பூசிக்கான பயன்பாட்டு இலக்கை ஐ.சி.எம்.ஆர் நிர்ணயித்தது என்று பல்வேறு நிபுணர்கள் கேள்வி எழுப்பியதோடு, இது விலங்குகள் மீதான சோதனையில்ல்லை. மனிதர்கள் மீதான சோதனை என்றும் விமர்சித்துள்ளனர்.