India

“நான் இந்திரா காந்தியின் பேத்தி; பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அல்ல” - உ.பி அரசுக்கு பிரியங்கா பதிலடி!

“நான் இந்திரா காந்தியின் பேத்தி, பெயர் அறிவிக்கப்படாத பா.ஜ.க செய்தித்தொடர்பாளர்கள் போல அல்ல.” என உ.பி அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசுக் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பமானதாக வெளியான ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உத்தர பிரதேச அரசு பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் தான் உண்மையைப் பேசுவதற்காக உத்தர பிரதேச அரசு பல்வேறு துறைகள் மூலம் தன்னை அச்சுறுத்துவதாக பிரியங்கா காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி, “மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது பணி மக்களை நோக்கியே இருக்கும். உண்மைகளை அவர்களுக்கு முன்பாக வைக்க வேண்டியது எனது கடமை.

பல்வேறு துறைகள் மூலம் என்னை அச்சுறுத்த முயற்சித்து உ.பி அரசு நேரத்தை வீணடிக்கிறது. அவர்கள் எனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும், உண்மைகளை வெளியே சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்.

நான் இந்திராகாந்தியின் பேத்தி. அறிவிக்கப்படாத பா.ஜ.க செய்திதொடர்பாளர்கள் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள் போல நான் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” - கொரோனா ஊரடங்கு விவகாரத்தில் பா.ஜ.க அரசை சாடும் ராகுல் காந்தி!