India

"என்னால் குடும்பத்தினருக்கு கொரோனா வந்துவிடும்” - அச்சத்தால் ஐ.ஆர்.எஸ் அதிகாரி தற்கொலை!

கொரோனா தொற்று அச்சத்தால் ஐ.ஆர்.எஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் கணிசமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மன அழுத்தத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. சாமானியர்கள் முதல் அரசு அதிகாரிகள், பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கொரோனா தொற்று கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த கூலித் தொழிலாளர்கள், ஐ.டி ஊழியர்கள் எனப் பலர் தற்கொலை செய்துள்ளனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த 56 வயதான இந்திய வருவாய்ப்பணி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துவாரகா பகுதியில் கார் ஒன்று நின்றிருப்பதாகவும், அதன் உள்ளே ஒருவர் மயக்க நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் காரில் இருந்தவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்ததாகவும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். தன்னால் தனது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் அச்சத்தால் அரசு அதிகாரியே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்று மட்டும் தமிழகத்தில் 44 பேர் கொரோனாவுக்கு பலி; 1843 பேர் புதிதாக பாதிப்பு- ‘அபாய’கட்டத்தில் சென்னை!