India

“தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்கும்” : ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,596,987 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 423,844 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,089,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 116,034 பேர் பலியாகினர்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்ததுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் பாதிப்பு 2,97,001 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,102 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா உலக அளவில் நான்காவது இடத்திற்குச் சென்றுள்ளது நாட்டு மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழ்நாடு உட்பட நாடுமுழுதுவம் 13 மாநிலங்களில் 69 மாவட்டங்களில் கொரோனா பரவல் இருப்பதாக மத்திய அரசு தரப்பிலான ஆய்வு விபரங்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும் அதில், இந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் 5 சதவீதக்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 46 மாவட்டங்களில் நடத்தும் சோதனைகளில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கணக்குகளின் படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடுகள் அதிகமாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தில் மருத்துவமனைகளில் இட நெருக்கடி, ஆக்சிஜன் தேவைகளை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி நாட்டுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சென்னை, மும்பை போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அபாய கட்டத்தில் உள்ளது” - ICMR ஆய்வில் அதிர்ச்சி தகவல்!