India
“பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுமாடுகளைக் கொன்ற கொடூரம்” - இந்தியாவில் விலங்குகள் மீது தொடரும் தாக்குல்!
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு காட்டுப்பகுதியில், 15 வயதுடைய கர்ப்பிணி யானை, மர்ம நபர்கள் வெடியை மறைத்து வைத்திருந்த அன்னாசி பழத்தைக் கடித்து வாய் சிதறி உயிரிழந்த சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தை அறிந்த சமூகவலைதள வாசிகள் தங்களது உள்ளக் குமுறலையும், ஆத்திரத்தையும் சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். பிரபலங்கள் பலரும் யானைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக பதிவிட்டனர்.
இந்த நிகழ்வு நடந்த ஒரே வாரத்திற்குள் இமாச்சல பிரதேசத்தில் வெடிமருந்து வைத்து மறைக்கப்பட்ட கோதுமை உருண்டையை சாப்பிட்டதால் கர்ப்பிணி பசுமாடு படுகாயத்துக்கு ஆளானது. இதனால், அதன் வாய், பற்கள் மற்றும் தாடைப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில், 3 பசுமாடுகள் பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் பசரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவர் விவசாயம் மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். பால் வியாபாரம் செய்வதற்காக 4 கறவை மாடுகளை கிட்டே வளர்த்து வந்துள்ளார்.
இந்த பசுமாடுகள் கிட்டேவின் பக்கத்து தோட்டக்காரரான மஞ்சுநாத் என்பவரின் வயலில் அடிக்கடி மேய்ச்சலுக்குச் சென்றதால் இருவருக்கும் மோதல் நடந்தவண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வரவில்லை என கிட்டே தேடியபோது, தனது மூன்று பசுமாடுகள் மஞ்சுநாத் வயலில் வாயில் நுரைதள்ளி இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுதொடர்பாக பசரவள்ளி காவல்நிலையத்திற்கு கிட்டே புகார் அளித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பலாப்பழத்தில் விஷம் வைத்து பசுமாடுகள் கொல்லப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாகியுள்ள மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
பசிக்காக மேய வந்த பசுமாட்டை விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் விலக்குகள் மீது மனிதர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரித்துவிட்டதாக விலங்கின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!