India

“கொரோனா பாதிப்பால் மீள முடியாத பொருளாதார சரிவு” : நிதியமைச்சரை மாற்ற மோடி முடிவு - அமைச்சரவையில் மாற்றம்?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. இந்த சூழலில் நிதியமைச்சரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அவரே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், தற்போது நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்ட நிலையில் பொருளாதார நிபுணர் ஒருவரை புதிய நிதி அமைச்சராக நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக கட்சிக்கு வெளியில் இருந்து ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வங்கி தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய கே.வி.காமத் கடந்த 27 ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏற்கனவே ஆசிய வளர்ச்சி வங்கியிலும், இன்போசிஸ் நிறுவனத்திலும் பணியாற்றியவர். இவரை புதிய நிதி அமைச்சராக நியமிக்க பிரதமர் பரிசீலித்து வருவதாகக் தெரிகிறது.

அதேபோல் இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய், நந்தன் நீலகனி பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. கடந்த முறை வர்த்தக தொழில் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு பெயரும் பட்டியலில் உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிஹார் தேர்தலும், அடுத்த ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநில தேர்தல்கள் வரவிருப்பதால் அதனையும் மனதில் கொண்டு தனது அமைச்சரவையை மாற்றயமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.