India

“சமூகப் பரவலைக் கண்டறிய ஆன்டிபாடி சோதனையை மீண்டும் தொடங்கவேண்டும்” : மாநில அரசுகளுக்கு ICMR பரிந்துரை !

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமூகப் பரவலைக் கண்டறிய மீண்டும் ஆன்டிபாடி சோதனையைத் தொடங்க மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு எலிசா ஆண்டிபாடி கிட் என்கிற புதிய கருவியைத் தயாரித்துள்ளது. இதன்மூலம் அதிக மக்களிடம் சோதனைகளை விரிவுபடுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் தோல்வியடந்ததைத் தொடர்ந்து அவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூனா தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் புதிய கருவியை தயாரித்துள்ளது.

இந்த எலிசா ஆன்டிபாடி கிட் சோதனை மூலம் நோய் தொற்று ஏற்பட்டு 5 நாள் முதல் 7 நாள் ஆன ஒருவரின் ரத்தத்தை சோதனை நடத்தினால் நோய் தொற்றை கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு தயாரிப்பு தொடங்கிவிட்டதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

இதனைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு மையங்களில் அனைவருக்கும் சோதனை நடத்தலாம்.

மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ரயில், பேரூந்து, விமான நிலையப் பணியாளர்கள் ஆகியோருக்கும் சோதித்து கொரொனா பரவலைக் கண்டறியலாம். அதே போல் வணிகர்கள், வங்கி, தபால் ஊழியர்கள், நகராட்சிப் பணியாளர்கள் என்று அதிகமாக மக்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு சோதனை நடத்தலாம்.

தொழிற்சாலைகளிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியிலும், சிறைகளிலும் பரவல் உள்ளதா என்றும் இந்த சோதனை மூலம் கண்டறியலாம் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

Also Read: இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வைத்த வைஷ்ணவி கோவில் நிர்வாகத்தை மிரட்டும் பஜ்ரங் தள் !