India

5ம் கட்ட ஊரடங்கு : தீவிரமாகும் கொரோனா.. எதிர்க்கும் மாநில அரசுகள் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு ?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 65 நாட்கள் முடிந்த நிலையில், வைரசால் பாதிக்கப்பட்டு 86,110 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், சென்னை உட்பட நாடு முழுவதும் 13 மாநகராட்சிகளில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து ஊரடங்கை விலக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் இரண்டு உயர்மட்டக்குழுக்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளத் தொடர்ந்து புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் வகுத்துவருகிறது. அது இறுதி செய்யப்பட்டவுடன் இன்றோ, நாளையோ அடுத்த 15 நாட்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பெரிய வணிக மையங்கள் இயங்குவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும். வழக்கமான ரயில் போக்குவரத்தும், வெளிநாட்டு விமானப்போக்குவரதும் தற்போது அனுமதிக்கப்படாது. சில மாநிலங்கள் பேருந்து இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளன. நீண்ட தூர போக்குவரத்து குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பூனா, தானே, சூரத், ஜெய்பூர், ஜோத்பூர், இந்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாவட்டங்களில்தான் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பாதிப்பில் 70% கொரோனா தொற்று உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Also Read: கொரோனா நோயைப் போக்க மனித தலையை வெட்டி நரபலி கொடுத்த கொடூரம் - ஒடிசாவில் கோயில் பூசாரி கைது!