India

“இந்தியாவின் GDP 5 சதவீதமாக சுருங்கும் - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி”: மோடி அரசை எச்சரிக்கும் CRISIL!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, உற்பத்திக் குறைவால் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டு இருப்பதாக ‘கிரிசில்’ நிறுவனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ‘கிரிசில்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் தகவலில், கடந்த 69 ஆண்டுகளில் இந்தியா மூன்று முறை மட்டுமே பொருளாதார நெருக்கடி மற்றும் மந்த நிலையை கண்டிருக்கிறது.

குறிப்பாக சில தரவுகளின்படி, 1958 மற்றும் 1966, 1980 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியா மந்த நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. அதற்குப்பின், இப்போதுதான் 2020-இல் மீண்டும் பொருளாதார மந்தத்தை இந்தியா சந்தித்து வருகிறது என்று ‘கிரிசில்’ குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதில், “நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி) 5 சதவிகிதமாக சுருங்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை ஜி.டி.பி 25 சதவிகித வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட வளர்ச்சி விகிதம், அடுத்தமூன்று காலாண்டுகளுக்கு சாத்தியமில்லை.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்தை நிரந்தரமாகவே இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விவசாயம் சாரா பொருளாதாரம் மட்டும் அல்ல சேவைத்துறையை சேர்ந்த கல்வி, பயணம், சுற்றுலா போன்ற சேவைகளும் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கக் கூடும்.

இதனால் பணியிழப்பு மற்றும் வருவாய் சரிவும் தொடரும். கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் பொருளாதாரம் மிக நீண்ட காலத்திற்கு மோசமான நிலைக்கு தள்ளப்படலாம். கொரோனா தொற்று அதிகரிப்பால், செலவினங்களும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2020-ம் ஆண்டுக்கான, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சிக் கணிப்பை. - 0.5 சதவிகிதமாக நோமுரா குறைத்துள்ளது. பிட்ச்ரேட்டிங்ஸ் 4.6 சதவிகிதத்திலிருந்து 1.8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பா.ஜ.க அரசின் மோசமான நடவடிக்கை - முறையில்லாத ஊரடங்கால் சில்லறை வணிகத்தில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு!