India

“உள்ளூரில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது”: புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வேதனை!

உள்ளூரில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறிவதில் மிகுந்த சிரமம் உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் 31 பேருக்கு கொரனா நோய் தொற்றுள்ளது. இதுவரை புதுவையில் 6,535 பேருக்கு உமிழ் நீர் சோதனை நடத்தியதில் 6,444 பேருக்கு கொரனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக மாநில எல்லைகளில் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, அதாவது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, புதுச்சேரிக்கு, 4,090 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களை மாநில சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக மருத்துவ ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்களில் சிலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக உள்ளூரில் இருப்பவர்களுக்கு யாருக்கு நோய் தொற்று இருக்கின்றது என்பது கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து புதுவை வருபவர்களை அந்தந்த விமான நிலையங்களில் தடுத்துவிட முடியும்.

அதேபோல் வேறு மாநில சிகப்பு மண்டலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் வருபவர்களை மாநில எல்லைகளில் தடுத்து சோதனை நடத்த முடியும், ஆனால் உள்ளூரில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறிவது பெரும் சிரமமாகவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எடப்பாடி அரசின் அலட்சியம்” : உணவின்றி இரண்டு நாட்களாக கேரள எல்லையில் காத்திருக்கும் தமிழக மக்கள்!