India

“உ.பி செல்லவேண்டிய ரயில் ஒடிசாவுக்குச் சென்றதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிர்ச்சி” - ரயில்வே அலட்சியம்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் நடைபயணமாகவே சாலைகளில் ஊர்ந்தனர்.

மாநிலம் விட்டு மாநிலம் பலநூறு கிலோமீட்டர்கள் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், பட்டினிக் கொடுமையாலும், உடல்நிலை குன்றியும், விபத்துகளாலும் கோரமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்லாக மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மனிதத் தன்மையற்ற செயலையும் மேற்கொள்கிறது பா.ஜ.க அரசு.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரெயில் நிலையத்தில் இருந்து, உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்லவேண்டிய ரெயில் புறப்பட்டது.

இந்த ரயில் வேறு திசையில் பயணித்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. உத்தர பிரதேசம் செல்ல வேண்டிய புலம்பெயர் தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதிகாரிகளின் குழப்பமான பதிலால் அதிருப்தி அடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வே, “சிறப்பு ரயில்கள் வழக்கமான வழித்தடங்களில் இல்லாமல், சில வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படுகின்றன. குழப்பம் காரணமாக இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தர பிரதேசம் செல்லவேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமல் அலைக்கழித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

Also Read: “கையில் 1 ரூபாய் கூட இல்லை... வேலையும் பறிபோனது” - 7 நாட்கள் பயணித்து ஊர் திரும்பிய தொழிலாளி தற்கொலை!