India

“மருத்துவ பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிக்கு வர உத்தரவு”- விபரீதம் புரியாமல் மோடி அரசு சிக்கன நடவடிக்கை?

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மூன்றரை மாதங்களில் பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. கொரோனா தடுப்புப் பணிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்நின்று கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவத் தொடங்கியதில் இருந்தே மருத்துவ பணியாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து அரசு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் இடத்தில் தங்கியிருந்து தங்கள் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

கொரோனா வார்டில் நேரடியாக பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் ஹோட்டலில் தங்க வைக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் மாநில அரசு செய்துகொடுக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்றும் தரமான உணவினை அரசு கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக பலருக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் எந்த வித சலிப்பும் இல்லாமல் மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகின்றனர்.

இப்படி அர்பணிப்புணர்வுடன் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதிப்புக்கு ஆளாக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், PPE கிட் எனப்படும் பாதுகாப்பு ஆடையுடன் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆபத்தில் இல்லை என்றால் வீட்டுக்குச் செல்லலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுமார் மூன்றரை மாதங்களாக குடும்பத்தை விட்டுவிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று பணிக்கு வராமல் இருப்பதற்கு காரணம் கொரோனா தொற்று தங்கள் மூலம் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுவிட்டும் என்ற் அச்சத்தில் தான். இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மருத்துவப் பணியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக நம்பிடம் பேசிய செவிலியர் ஒருவர், “அரசு எங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை; எந்தவித நெருக்கடியான சூழலிலும் எங்கள் கடமைகளை உணர்ந்து பணியாற்றி வருகின்றோம். அரசு சொல்கிற இடத்தில் தங்க வைப்பதில் என்ன பிரச்னை.

மேலும், உபகரணத்தின் தரம் - மாஸ்க் குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுகிறது. குறிப்பாக, PPE அணிந்து பணியாற்றிய பல மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்தச் சூழலில் நாங்கள் வீட்டில் இருந்து பணிக்கு வந்தால் எங்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பு எற்பட்டுவிடுமோ என்ற பயம் உள்ளது. அரசு எதையும் அறிவிக்கும் முன் சிந்தித்து அறிவிக்கவேண்டும்.

இந்த அறிவிப்பின் மூலம் நாங்கள் புரிந்துகொண்டது இந்த அரசு எங்களை நிர்க்கதியாக விட்டுவிட்டது என்றுதான்” என வேதனையுடன் பேசினார். மோடி அரசின் இத்தகைய அறிவிப்பை உடனே திரும்ப பெறவேண்டும் என மருத்துவ பணியாளர்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “ஒரே நாளில் 5,611 பேர் பாதிப்பு - 132 பேர் பலி” : கொரோனா கட்டுப்படுத்தலில் தோல்வி காணும் மோடி அரசு!