India
“அம்ரித்தின் உயிரை காக்க துடித்த யாகூப்; கையை விரித்த டாக்டர்” - நண்பனின் மனதை உருக வைக்கும் போராட்டம்!
வைரஸ் பாதிப்பை காட்டிலும் இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்களே தினந்தோறும் தலைப்புச் செய்திகளாக நாடு முழுவதும் வலம் வருகிறது. ஊரடங்கால் வேலையின்றி உணவு கிடைக்காமல் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கால்நடையாய் படையெடுப்பதை கடந்த 50 நாட்களாக செய்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான கி.மீ தொலைவுக்கு நடையாய் நடப்பதால் சோர்ந்து போயும், விபத்துகளிலும் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. 50 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்களுக்கான போக்குவரத்தை அரசு ஏற்பாடு செய்தாலும் அதனை உரியவர்களின் செவிகளுக்கு கேட்கும் வகையில் கொண்டு சேர்க்க அரசு தவறியதால் இந்த படையெடுப்பு இதுகாறும் தொடர்ந்தே வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் உடல்நிலை குன்றிய இளைஞர் ஒருவர் தன் நண்பனின் மடியில் படுத்துக் கிடக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. 23 வயதுடைய அம்ரித் குமார் மற்றும் முகமது யாகூப். இருவரும் உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள தேவ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் சூரத்தில் உள்ள வெவ்வேறு டெக்ஸ்டைல் கடைகளில் பணியாற்றி ஒரே வீட்டில் தங்கி வந்தவர்கள். ஊரடங்கு காரணமாக பணி முடக்கம் ஏற்பட்டதால் எல்லோரையும் போல் சொந்த ஊருக்குச் செல்ல முற்பட்டிருக்கிறார்கள். கையில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ட்ரக் லாரி மூலம் செல்ல எத்தனித்திருக்கிறார்கள். அந்த லாரியில் 40க்கும் மேற்பட்டோர் பயணிப்பதால் அமர இடமில்லாமல் நின்றபடியே யாகூப்பும், அம்ரித்தும் பயணித்திருக்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தின் கோலராஸ் என்ற பகுதியை அடையும் சமயத்தில் அம்ரித்தின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று யாகூப் உட்பட லாரியில் இருந்தவர்களுக்கு அம்ரித்தின் உடல்நிலை அச்சமடைய வைத்திருக்கிறது. லாரி உரிமையாளரோ மருத்துவமனை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். அம்ரித்தை நடு வழியில் இறக்கிடவிடவும் உடன் இருப்பவர்கள் நிர்பந்திருத்திருக்கிறார்கள்.
ஆனால், தனது நண்பனை தனியே எப்படி விடமுடியும் என எண்ணி யாகூபும், அம்ரித்தும் இறங்கி இருக்கிறார்கள். பாதி வழியிலேயே இறங்கியதால், மருத்துவ உதவிக்காக பாதி பணத்தையாவது கொடுக்குமாறு யாகூப் லாரி உரிமையாளரிடம் கேட்டபோது கொஞ்சமும் இரக்கமில்லாமல் மறுப்பு தெரிவித்து கிளம்பியிருக்கிறார். மறுபுறம் அம்ரித்தின் உடல்நிலை போக போக மோசமடைந்து யாகூப்பின் மடியிலேயே மயங்கியிருக்கிறார். செய்வதறியாது தவித்து போன யாகூப் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவிக் கேட்டும் பயனில்லை.
சிறிது நேரம் கழித்து, சாமுவேல் தாஸ் என்ற பத்திரிகையாளர் ஒருவர் உள்ளூர் மக்களின் உதவியோடு ஆம்புலன்ஸை வரவழைத்திருக்கிறார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அம்ரித் குமாருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை நடத்தியதில் தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என தெரிய வந்திருக்கிறது. ஆனால், அவரது உடல்நிலை மோசமானதற்கு காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆகவே, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்ரித் குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
அம்ரித்தின் உடல் வெப்பநிலையைக் கண்டு அஞ்சி மருத்துவ பணியாளர்களே ஒதுங்கி இருந்த போதும், கடைசி வரை தன்னுடைய நண்பனுக்காக தவித்து அவனை தொட்டபடியே யாகூப் இருந்தார் என மருத்துவர் கூறியது நெகிழ வைத்துள்ளது.
மதத்தால் பிரிந்திருந்தாலும், மனிதத்தால் ஒன்றே என்பதை யாகூப்-அம்ரித்தின் நட்புறவு, மதவாத அரசியல் பேணுபவர்களுக்கு சம்மட்டி அடியை கொடுக்கும் என்பதில் ஐயப்பாடில்லை.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!