File Image
India

“20 லட்சம் கோடி அறிவிப்பு ஒரு ஏட்டுச் சுரைக்காய்; ஏழைகளுக்கென ஒரு திட்டமும் இல்லை” - டி.ஆர்.பாலு சாடல்! 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை ஆலந்தூர் தொகுதி, ஆலந்தூர் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தி.மு.க சார்பில் அத்தியாவசிய பொருட்கள் கொண்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை, தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி, “உலகம் முழுவதும் 48 லட்சம் மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 96 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டதில் 3,029 பேர் பலியாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே 11 ஆயிரம் பாதிப்பை தாண்டியிருக்கிறது.

தமிழக மக்களை இந்தக் கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து, அதனால் உண்டாகக்கூடிய பொருளாதார பிரச்னைகளில் இருந்து காக்கின்ற பணிகளை தி.மு.க தலைவர் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் செய்து வருகிறார்.

ஆனால், ஆளும் அரசோ, ஆயிரம் ரூபாயை மட்டும் ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளது. இந்த தொகை மக்களுக்கு போதுமானதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் கோரிக்கை வைத்தார். ரூ.7,500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நலனுக்காக உதவி தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கவனிக்காமல் நாட்டில் உள்ள சில பணக்காரர்களுக்கு மட்டும் உதவி செய்ய கூடிய ஆட்சியாக மத்திய அரசு பணியாற்றுகிறது. 20 லட்சம் கோடி ரூபாய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் உள்ளது.

Also Read: “‘சுயசார்பு இந்தியா’ என்ன திடீர் புளியோதரையா?” - மோடி அரசை விமர்சிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி.!

நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி மத்திய அரசு அறிவிக்க முடியும்? நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கக்கூடிய வகையில் அறிவிப்பு செய்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால்தான் இவை எல்லாம் சாத்தியமாகும். மத்திய அரசு அறிவித்தது ஏழைகளுக்கான அறிவிப்புகள் அல்ல.” எனக் கூறியுள்ளார்.

Also Read: “காண்ட்ராக்ட் போலி கணக்கை கொரோனா சோதனையிலும் காட்டுவதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!