India
“ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் இல்லை?” - செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பதில்!
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை கடந்த 9ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் சமஸ்கிருதம், பாலி, பிரக்ரிதி, அரபிக், பெர்சியன், செம்மொழி ஒடியா, செம்மொழி கன்னடம், செம்மொழி தெலுங்கு மற்றும் செம்மொழி மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள இளம் அறிஞர்களுக்கு மகரிஷி பத்திரன் வியாஸ் சம்மன் விருது மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களுக்கு கௌரவ சான்றிதழ்களை குடியரசுத்தலைவர் வழங்கவுள்ளார் என்றும் இதற்கான சிபாரிசுகள் ஜூன் 15ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் மொழி இந்த அறிவிப்பில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் இதுகுறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, அவ்வமைப்பின் இயக்குனர் விளக்கமளித்துள்ளார். அது பின்வருமாறு :
1. இந்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. அதனடிப்படையில் நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் தொடங்கியது. பின்னர் 2008 மே மாதம் 19 ஆம் நாள் அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்து தன்னாட்சி நிறுவனமாகச் சென்னையில் நிறுவியது.
செம்மொழித் தமிழுக்குச் சிறப்பாகப் பங்காற்றியோருக்கு இந்நிறுவனத்தின் மூலம் செம்மொழித்தமிழ் இந்திய குடியரசுத்தலைவர் விருதும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இவ்விருதானது செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்து வருகிறது. மேலும் இது போன்று பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு செயற்பட்டு வருகின்றன.
முதலில் தமிழ்மொழி மட்டும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு அதற்கான மொழிநிறுவனமும் தொடங்கப்பட்டது. அதன்பின்னரே கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. மேலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாகத் தனித்துவமாக முன்னரே செயல்பட்டு வருவதால் விருதுகளுக்கான விளம்பரம் இந்நிறுவனமே அறிவிக்கும்.
கன்னடம் போன்ற மொழிகள் இன்னும் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமாகச் செயல்படாததால் அம்மொழிகளின் விருதுகளுக்கான விளம்பரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. எனவே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படுவதால் குடியரசுத்தலைவர் விருதுகளுக்கான விளம்பரம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அறிவிக்கும்.
இவ்வாறாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் மொழியில் சிறந்த ஆய்வுகளைப் புரிந்த பல்வேறு தமிழ் ஆய்வு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான விருதாளர்களைத் தேர்வுக்குழுத் தேர்வு செய்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணியினை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் விருதாளர்களின் பெயர்களை அமைச்சகம் முடிவுசெய்து அறிவிக்கும் எனக் கருதுகிறோம். மேலும் அதன் தொடர்ச்சியாக 2019-2020 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் விருதுகளுக்கான விளம்பரம் விரைவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிக்கும்.
விரைவில் தேர்வுக்குழுக் கூட்டி அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலிக்கப்பட்டு விருதுகள் வழங்குவதற்கான அனைத்துப் பணிகளையும் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!