India
“இராணுவ விமானங்கள் மலர் தூவும்” : முப்படைத் தளபதி அறிவிப்பு - எதை மறைக்க இத்தனை வேடம்?
கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், மே 3ம் தேதி, மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பிர் சிங் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முப்படைத் தளபதி பிபின் ராவத், “ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலிஸார் உள்ளிட்டோர் இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காப்பது என்ற அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் விதமாக, மே 3ம் தேதியன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை, கடற்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும்.
இராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு இராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலிஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்” என்றார்.
மருத்துவப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பிரதமர் மோடி கைதட்டச் சொன்னபோதும், விளக்கேற்றச் சொன்னபோதும் பலர் கூட்டமாகக் கூடி கொரோனா ஊரடங்கின் நோக்கத்தையே பாழ்படுத்தினர்.
தற்போது முப்படைத் தளபதி பிபின் ராவத்தும், இராணுவத்தினரை கூட்டமாகக் கூட்டும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பைப் போன்றே ஒன்றுக்கும் உதவாததாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு போராட்டம் நடத்தவும் துணிந்தனர். உயிர்காக்கும் உபகரணங்களை சரிவரத் தர இயலாத அரசு, அவற்றை மறைக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
Also Read
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!