India

“இந்தியாவின் நிலை மேலும் மோசமடையும்” - உலக வங்கி எச்சரிக்கை! #CoronaCrisis

கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் சின்னாபின்னமாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 681 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, 60 ஆயிரம் பேர் வரை நகர்ப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பினர். ஆனால் இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வைத் தராது.

இந்நிலையில் இந்தியாவில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது பா.ஜ.க” - சோனியா காந்தி விளாசல்!