India

மருந்து வாங்கச் சென்றவரை சராமாரியாக தாக்கிய போலிஸ்... இளைஞர் பலி - மருத்துவமனை முன்பு பதற்றம்! #Lockdown

ஆந்திர மாநிலத்தில், மருந்துக்கடைக்குச் சென்று திரும்பிய இளைஞரை போலிஸார் கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய தேவை தவிர மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவைகளுக்காக வெளியே வருவோரை போலிஸார் கண்மூடித்தனமாகத் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகமது கவுஸ் (28). இவர் சில நாட்களாக உடல் நலமின்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சத்தனப்பள்ளி வாகன சோதனைச் சாவடி அருகே உள்ள ஒரு மருந்துக் கடையில் தனக்கு மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சோதனைச்சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலிஸார் இவரை வழிமறித்து, ஊரடங்கு உத்தரவின்போது வெளியில் ஏன் சுற்றுகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தான் மருந்து வாங்க வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத போலிஸார் முகமது கவுஸ் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

போலிஸாரின் சரமாரி தாக்குதலால் சம்பவ இடத்திலேயே முகமது கவுஸ் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுஸ் உயிரிழந்தார்.

இதையறிந்த கவுஸின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு அராஜக போலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சமீபத்தில் தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று மாநிலத்தையே உலுக்கியது. மதுரையில் இஸ்லாமிய முதியவரை போலிஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: #CORONA தமிழகத்தில் முதல் டாக்டர் பலி: “அதிமுக அரசு அலட்சியத்தை கைவிட வேண்டும்” -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்