India

“வெளி மாநிலங்களில் உள்ள மே.வங்க தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி” - மம்தா பானர்ஜி அறிவிப்பு!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இந்த ஊரடங்கால் பெரிய நிறுவனங்களை விட அன்றாடம் கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களே அதிகபடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சொந்த ஊரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் பலர் கையில் பணமில்லாமல், உண்ண உணவும் கிடைக்காமல் தினந்தோறும் திக்குமுக்காடி வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய உதவி செய்யப்படும் என அரசுகள் அறிவித்திருந்தாலும், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக முதற்கட்ட ஊரடங்கின் இறுதி நாளான கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஒன்றுகூடி உணவு வழங்கவில்லை என்றும், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும் வலியுறுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். அவர்கள், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு தங்களுடைய நிலை குறித்து விவரித்துள்ளதாகவும் அதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் உள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக ரூ.1,000 வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தங்கள் மாநிலத் தொழிலாளர்களின் நலன் காக்க உதவி செய்யுமாறு பிற மாநில முதலமைச்சர்களிடம் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள 16 மாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சம் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் 711 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: குஜராத்தில் இந்து, முஸ்லிம்களுக்கு தனித்தனி கொரோனா வார்டு? பாகுபாட்டின் உச்சத்தில் பா.ஜ.க..!