India

“ஊரடங்கால் வீடுகளுக்கு மதுபானம் விநியோகம்?” : மேற்கு வங்கத்தில் நீடிக்கும் குழப்பம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் பொதுஇடங்களில் மக்கள் கூடும் வகையில் செயல்படும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற முக்கிய நகரங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் இது மது குடிப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது; அவர்களை வீபரித முடிவு எடுக்கவும் வைத்துள்ளது.

குறிப்பாக, கேரளாவில், மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொண்டதாலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

நாடுமுழுவதும் குடிபழக்கம் உள்ளவர்கள் ஊரடங்கை கடைபிடிக்காமல், மது கிடைக்குமா என அழைந்து திரிகின்றனர். சில இடங்களில் அரசுக்கு தெரியாமல் விற்கப்படும் போலி மதுக்களையும், கள்ளச்சாரயத்தையும் குடித்து பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெளியான அறிவிப்பில், மேற்கு வங்க மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வீடுகளுக்கு நேரிடையாக மதுபானம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதிகளில் செயல்படும் காவல் நிலையங்கள் மூலம் மதுபானக்கடைகளுக்கு பாஸ் வழங்கப்படும் எனவும், ஒரு கடைக்கு அதிகபட்சம் 3 பாஸ்கள் தான் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மதுபானம் வாங்குபவர்கள் முதலில் அதற்காக அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை போனில் அழைத்து முன்பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு சில்லறை விற்பனையாளர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி வைரலாகிய பின் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வங்காள தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா ​​கலால் துறையின் வெளியான அறிவிப்பை மறுத்துள்ளார். "மாநில அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார். இதனால் மதுபிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Also Read: “டாஸ்மாக் மூடலால் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்” : தமிழகத்தில் மதுவால் நிகழும் கொடுமைகள்- கவனிக்குமா அரசு?