India

ஹஜ் யாத்திரை செல்ல பல ஆண்டுகளாக சேமித்த ரூ. 5 லட்சத்தை கொரோனா நிவாரணமாக வழங்கிய மூதாட்டி! #CoronaRelief

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,071 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகல் அறிவுறுத்தப்பட்டு 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

பல்வேறு பெரு நிறுவனங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வம் கொண்ட தனி நபர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிவாண உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், ஹஜ் யாத்திரை செல்ல சேர்த்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை சேவா பாரதி அமைப்புக்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

கலிதா பேகம் என்ற 87 வயதான இஸ்லாமிய மூதாட்டி, ஹஜ் யாத்திரை செல்வதற்காக பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஏழை மக்களுக்குப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான சேவா பாரதி அமைப்பினரிடம் 5 லட்சம் நன்கொடை அளித்து, காஷ்மீரில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்யப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்லாமிய மூதாட்டியின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கலிதா பேகம், ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருபவர். இவரது மகன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஃபாரூக் கான் தற்போது ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஊரடங்கு உத்தரவால் இதுவரை 17 புலம்பெயர் தொழிலாளர்கள்; 4 குழந்தைகள் பரிதாப பலி : வெளியான அதிர்ச்சி தகவல்!