India

“முகக் கவசத்தை விட ஆயுதம் முக்கியமா?” : ரூ.880 கோடி செலவில் இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1021 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 19 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ள நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்னும் 5 முதல் 10 நாட்களில் கொரோனா பரவல் அபாயகரமான இரண்டாம் கட்டத்தை எட்டும் என நிதி ஆயோக்கின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் தற்போதைய சூழலில் போதிய அளவில் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும் மார்ச் 25ம் தேதியின் படி, நாடு முழுவதும் 118 பரிசோதனை ஆய்வகங்களும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளை பரிசோதிக்கவும் மட்டுமே வசதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பது குறைவே என்றே தெரிகிறது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் வட மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் திரும்புகின்றனர். இதனால் அரசு கொண்டுவந்த ஊரடங்கை அரசே மக்களை மீறவைத்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி செய்தியாக மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த நெருக்காடியான காலத்தில் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்காமல் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் செய்ய 116 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஆயுத ஒப்பந்தம் முதலில் பிப்ரவரி 2018 இல் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)- டிஏசி) மூலம் அங்கீகரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 16,479 துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நரேந்திர மோடியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஆயுத ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகும்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு நாடுகளின் பாதுகாப்புப் படைகளால் உபயோகப்படுத்தப்படும் இந்த ‘நெகேவ்’ வகையிலான துப்பாக்கிகள், ஆயுதப் படைகளிடம் தற்போதுள்ள துப்பாக்கிகளைவிட தொலைவில் உள்ள எதிரிகளை மிக துல்லியமாக தாக்க உதவும். இந்திய ஆயுதப்படைகளுக்கு மிகவும் தேவைப்படும் இந்த ரக துப்பாக்கிகள், படை வீரா்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆயுத தாக்குதல் இன்றி கொரோனாவால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாளியுள்ளனர். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவும், பிற நாடுகளுக்கு மருத்துவ உதவிகள் செய்யும் கியூபாவும் ராணுவ ஆயுதங்களை வாங்கிக் குவிக்காமல் சுகாதாரத்துறைக்காக தங்களின் நிதியை அதிகம் ஒதுக்கியுள்ளனர்.

அதிக அளவில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு பாதிப்பு அதிகம் ஏறபட்டுள்ள நியூயார்க் நகரில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை என அந்த மாகண ஆளுநர் புலம்பியுள்ளார். வல்லரசு நாடு மக்களை அழிக்கும் ஆயுதங்களை வாங்கியதன் விளைவே இது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அரசியல் துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் அச்சின் வனாய்க், “மோடி அரசின் இந்த மிகவும் கண்டிக்கத்தக்கது. 1.3 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலால் ஏற்படும் ஆபத்தை சமாளிக்க இந்தியாவுக்கு ஒவ்வொரு ரூபாயும் தேவை

இந்திய மக்கள் அடர்த்தியான நகரங்களில் வாழ்கின்றனர். ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, ​​வட அமெரிக்கா அல்லது சீனா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளை விட, இந்த அவசரநிலையைச் சமாளிக்க இங்குள்ள மருத்துவ முறை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த நிதி ராணுவத்துக்கு மாற்றியது மிகவும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே போராடும் இந்தியப் பொருளாதாரம் இந்த கட்டத்தில் இராணுவச் செலவுகளை உள்வாங்கிக் கொள்ளவது மேலும் சுமையை ஏற்படுத்தும்.

இந்த அரசாங்கம் இந்தியாவை இஸ்ரேல் போல் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. ஆயுதங்கம் மூலம் தனது பலத்தை அதிகரித்து மக்களை ஒடுக்க முணைப்பு காட்டுகிறது” என தெரிவித்துள்ளார். மோடி அரசின் இந்த நடவடிக்கை எதிராக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: “வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை இந்தியா கண்டறியவில்லை” : மோடி அரசு மீது கொரோனா ஆய்வுக் குழு அதிருப்தி!