India

"கொரோனா அவசர காலத்தில் ராஜபாதைக்கு ரூ20,000 கோடி தேவையா?" அறிவீனசெயல் என சு.வெங்கடேசன் கண்டனம்!

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்ளாமல் டெல்லி ராஜபாதையை மீளுருவாக்கம் செய்ய நிதி ஒதுக்கியிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி சு.வெங்கடேசன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பல்லாயிரம் கோடி செலவில் சிலைகளும் கட்டிடங்களையும் அமைப்பதை விட கொரோனா போன்ற தொற்று வியாதிகளுக்கான சோதனைச் சாலைகளும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இன்றைய உடனடி தேவை.

2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சீன அரசாங்கம் ஏழு நாட்களில் பெய்ஜிங் நகரத்தில் Xiaotangshan மருத்துவமனையை கட்டிமுடித்தது. சீனா முழுவதும் கண்டறியப்பட்ட சார்ஸ் நோயாளிகளில் ஏழில் ஒரு பங்கு நோயாளிகள் இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக்கொண்டனர்.

மருத்துவ வரலாற்றில் இது ஒரு அதிசயம் என்று உலகம் புகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீன அரசாங்கம் ஹூபே மாகாணத்தின் உஹான் பகுதியில் அமைத்தது.

அந்த மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவம் பார்த்து இன்று இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தயாராகவுள்ளது உஹான். நம் மத்திய அரசு என்ன செய்கிறது? சென்ற ஆண்டு உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்விதழ் லான்செட் உலகை உலுக்கிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. மானுட சமூகம் கடந்த நூறாண்டுகளாக சுகாதாரத்தில் பெற்ற முன்னேற்றங்களை காலநிலை மாற்றம் இல்லாமல் செய்துவிடும் என்று அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்தது.

குறிப்பாக நோய் பரப்பிகளும் நோய் கிருமிகளும் அதிக அளவில் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது, இந்த பின்னணியில் புதிதாக ஆய்வகங்கள் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் செயல்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வகத்தை சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டி புதுச்சேரியில் உள்ள ஆய்வகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது மத்திய அரசு. இந்த முடிவை கைவிடும்படி மத்திய சுகாதார துறை அமைச்சருக்கு வேண்டுகோள்விடுத்து கடந்த வருடம் கடிதம் எழுதினேன்.

கொரோனா பரவலுக்கு பிறகு, மீண்டும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதிகமாக தேவைப்படும் ஆய்வகங்களை சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டி மூடும்/கைவிடும் மத்திய அரசு, 20,000 கோடியில் டெல்லியில் உள்ள ராஜபாதையை (rajpath) மீளுருவாக்கம் செய்ய திட்டங்களை அறிவித்துள்ளது.

இப்போது உலகத்தின் கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் தொற்றை தடுப்பதில் மாநில அரசுகளுக்கு அதிக பணம் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், டெல்லியின் ராஜபாதையை 20,000 கோடி செலவில் மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்ன? இந்த முழுப் பணத்தையும் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு நிதியாக வழங்கவேண்டும்.

மதுரையில் செயல்பட்டுவந்த ஆய்வகத்தை தொடர்ச்சியாக செயல்பட அனுமதிக்கவேண்டும், அதை தரம் உயர்த்தவும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். அப்படி செய்யத்தவறுவது அறிவீனமான செயல். உங்கள் அறிவீனத்துக்கு இந்த தேசம் பெரும் விலை தரப்போகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.