India

“காட்டுத்தீ போல பரவும்; கொரோனா வைரஸ் கொடூரமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” - மோடி எச்சரிக்கை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மக்களிடையே அச்சம் பரவி வருகிறது. நோய் பரவாமல் தடுக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் பேசியதாவது, “ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதை வெளிப்படையாக உணர்த்த பல நாட்களை எடுத்துக் கொள்ளும். அதுவரை பலரின் உடலுக்கும் அது பரவும். உங்களுக்கே தெரியாமல் அது நடக்கும். இது நடந்தால், காட்டுத்தீ போல இந்த வைரஸ் நாட்டில் பரவும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, இந்த வைரஸ் முதல் 67 நாட்களில் 1 லட்சம் பேருக்கு பரவியது. ஆனால், அடுத்த ஒரு லட்சம் பேருக்கு வெறும் 11 நாட்களில் பரவியது. அடுத்த 4 நாட்களில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் ஆகப் பெருகியது.

எத்தனை வேகமாக சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

இத்தாலி, அமெரிக்கா நாடுகளின் மருத்துவ சேவைகள் இந்த உலகின் மிக நவீனமானது என்று சொல்லப்படுகிறது எனினும் அவர்களாலேயே இந்த நோய் பரவலை சமாளிக்க முடியவில்லை என்றால் இந்த வைரஸ் எத்தனை கொடூரமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எந்த நாட்டின் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களோ அங்கு மட்டுமே இந்த நோய் கட்டுப்பட்டு இருக்கிறது. அந்த குடிமக்கள் அரசின் வழிகாட்டுதலை மிகவும் மதித்துப் பின்பற்றுகிறார்கள். அதைப் போல நாமும் இதை மிக மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: #CoronaAlert: நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு!