India

CoronaAlert: “மக்கள் நடமாடுவதை தவிர்க்கவும்; மீறினால் தண்டிக்கப்படுவீர்” - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் 19 மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், புதுச்சேரியில் ஒருவர் மட்டுமே கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் முதலமைச்சர் நாராயணசாமி.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று (மார்ச் 23) இரவு 9 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை புதுச்சேரி எல்லைகள் மூடப்படுகிறது. வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட வேண்டும். மக்கள் கட்டாயம் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே வரக்கூடாது.

மளிகை, பால், காய்கறி, பழக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் கூட்டமாக செல்லக்கூடாது. மீறினால் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்டிக்கடைகள், டீக்கடைகள், உழவர் சந்தை உள்ளிட்ட எல்லா சந்தைகளும் மூடப்படும். மக்கள் பொதுவெளியில் நடமாடுவதை நிறுத்தினால்தான் இந்தியாவில் 2ம் நிலையில் உள்ள கொரோனா தாக்கம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கப்படும்.

முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்குகிறார்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் தாராளமாக உதவலாம். இதற்காக முதல்வர் நிவாரண நிதியில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்படும்.” என நாராயணசாமி கூறினார்.

Also Read: “ஊரடங்கு தீர்வாகாது; கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்” : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!