India
கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கர்நாடகா, தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவின் கலபுர்கியை சேர்ந்த முகமது ஹுசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கல்புர்கிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கருதப்பட்டது.
இதையடுத்து கடந்த 5-ந் தேதி அவர் கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ஆகையால் உயிரிழந்த முதியவரின் இரத்த மாதிரி ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்த பின்புதான் அவர் எப்படி இறந்தார் என்பதை உறுதியாக கூற முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று உயிரிழந்த முதியவரின் இரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக சுகாதாரத்துறைக்கு கிடைத்துள்ளது. அதில் அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவேதான் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை கர்நாடக சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியது.
இதன்மூலம் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது உறுதியானதோடு, இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர் என்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!