India

“அமைச்சர்கள் கூட்டாக ராஜினாமா”: ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க சதி திட்டம்?- என்ன நடக்கிறது மத்திய பிரதேசத்தில்?

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க பல மாநிலங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தோல்வி அடைந்த பா.ஜ.க எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கலைத்து அங்கு தாங்கள் ஆட்சிக்கு வரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கடந்தாண்டு கர்நாடகாவிலும் இதே பாணியைத்தான் பா.ஜ.க. கையில் எடுத்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் பல கோடிகள் கொடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படியே, 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏ-க்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான அதிருப்தியாளர்கள் நேற்றைய தினம் தனி விமானம் மூலம் பெங்களூருவில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில முதல்வர் கமல்நாத் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் மத்திய பிரதேசத்திற்கு திரும்பிய கமல்நாத், தனது இல்லத்தில் நேற்றிரவு 9 மணிக்கு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கமல்நாத்திடம் கூறியதாகவும், அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என முதல்வர் கமல்நாத்தை அவர்கள் வலியுறுத்தி தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கமல்நாத் இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். அமைச்சர்களின் ராஜினாமா முடிவால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.