India

இந்தியாவில் பரவிவரும் கொரோனா : 10 விமானங்கள் ரத்து - வெறிச்சோடி காணப்படும் சென்னை விமான நிலையம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா, ஈரான், இத்தாலி என பல்வேறு நாட்டு மக்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நாடுமுழுவதும் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சென்னையில் இருந்து குவைத் போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், விமான பயணம் மூலம் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுவதால் ஏராளமான பயணிகள் விமான போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர். அதன் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியாவில் பரவிவரும் கொரோனா : ஐ.பி.எல் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு? - BCCI தலைவர் கங்குலி விளக்கம்!