India
“மோடி - அமித்ஷாவின் மதவாத வன்முறையால் இந்தியப் பொருளாதாரம் மேலும் பேரழிவை சந்திக்கும்”: யெச்சூரி ஆதங்கம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக சந்தித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கின்றன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு அடுத்தக் காலாண்டில் குறையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மதவாத வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிற ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி எந்தவிதத்திலும் சாத்தியமில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் - அதாவது மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 4.7சதவீதமாக புதிய வீழ்ச்சியை எட்டியுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் வீழ்ச்சியாகும்.
நாடு முழுவதும் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் உற்பத்தி வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே இத்தகைய வீழ்ச்சி தீவிரமடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் உற்பத்தி வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய உற்பத்தித்துறையை மேலும் கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாளுக்கு நாள் இந்தியப் பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது. மோடி - அமித் ஷா கூட்டணி இந்த அழிவை, சமூக நல்லிணக்கத்தின் அழிவால் இன்னும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்தச் சூழல் நீடித்தால் பொருளாதார நிலைமையில் எந்தவிதமான மீட்சியும் ஏற்படுவது சாத்தியமல்ல.
ஆரோக்கியமற்ற ஒரு சமூகத்தில், நல்லிணக்கமும் அன்பும் சிதைக்கப்படுகிற ஒரு சமூகத்தில், ஆரோக்கியமான பொருளாதாரம் இருக்கவே முடியாது. இன்னும் குறிப்பாக, ஆளுகிற கட்சியும் அதன் அரசாங்கமும் மக்களிடையே பிளவுவாதத்தை, வெறுப்புணர்வை, மதவாத வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிற ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. மோடி - அமித் ஷா கூட்டணி இதை உணரும் நிலையில் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!