India

“ரத்தக்கறை படிந்த வன்முறையாளர்களை மே.வங்கம் அனுமதிக்காது”-அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்! #GoBackAmitshah

நாடுமுழுவதும் டெல்லி வன்முறையைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

அதுமட்டுமின்றி மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடுமுழுவதும் கொண்டுவர முயற்சிக்கிறது பா.ஜ.க அரசு. அதன் தொடர்ச்சியாக சி.ஏ.ஏ-விற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றும் வருகிறது. அதன்படி மேற்குவங்கத்தில் பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்த சி.ஏ.ஏ ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தா வந்தார்.

சி.ஏ.ஏ-வை அமல்படுத்தியதையும், டெல்லி வன்முறையையும் கண்டித்து அமித்ஷாவின் வருகைக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷாவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன் பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின் போது ‘Go Back Amitshah’ முழக்கங்களையும் எழுப்பினர்.

அப்போது அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சலீம் கூறுகையில், “டெல்லி வன்முறையில் படர்ந்த இரத்தக்கறை அமித்ஷாவின் கைகளில் படிந்துள்ளது. அமித்ஷா போன்ற வன்முறையாளர்களை மேற்குவங்கம் அனுமதிக்காது. வன்முறைக்கு காரணமான அமித்ஷா பதவி விலகவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவில் இனி இருக்கமுடியாது”- டெல்லி கலரவத்தால் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை!