India

#DelhiBurns : உளவுத்துறை அதிகாரி படுகொலை : உடலை சாக்கடைக்குள் வீசிய வன்முறையாளர்கள்!

பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகின்றன. டெல்லியில் நேற்று முன்தினம், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து போராட்டக் களங்களில் வன்முறை வெடித்தது. டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.

வன்முறையாளர்கள் வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்டவற்றை தீவைத்துக் கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் உடல் ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் பெயர் அங்கிட் சர்மா என டெல்லி போலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், செல்லும் வழியில் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த அவரது சடலம் சாந்த்பாக் பாலம் அருகே கழிவுநீர்க் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.

அங்கிட் சர்மாவை காணாததால் அவரது குடும்பத்தினர் தீவிரமாக தேடி பின்னர், போலிஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, அவரது உடல் இன்று கழிவுநீர்க் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்களால் உளவுத்துறை அதிகாரி தாக்கி கொல்லப்பட்டது டெல்லியில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Also Read: #DelhiBurns : “இஸ்லாமியருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் என்ற ரஜினி எங்கே?”- தி.மு.க எம்.பி கேள்வி!