India

“அரசை எதிர்த்தால் தேசவிரோதம் என்று முத்திரை குத்துவதா?” : உச்சநீதிமன்ற நீதிபதி துணிச்சல் பேச்சு!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கருந்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்றார். ஜனநாயகமும், எதிர்ப்பும் என்ற பெயரில் கருந்தரங்கில் பேசிய நீதிபதி தீபக் குப்தா, “பெரும்பான்மை என்பது ஜனநாயகத்துக்கு எதிரான கூற்றுதான்.

நாடுமுழுவதும் சமீப காலமாக நடைபெறும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பதால் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் போராட்டம் அரசுக்கு எதிராக நடைபெறுகிறது. 51 சதவீத வாக்குகளை வெற்று பெரும்பான்மை பெற்றால், 49 சதவீதம் வாக்குகளை பெற்றவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாய்மூடி இருக்கவேண்டும் என்பதல்ல.

ஜனநாயகத்தின் உள்ளார்ந்த பகுதியே கேள்வி கேட்பதுதான். அமைதியான வழியில் போராட எல்லோருக்கும் உரிமை உண்டு. அரசை எதிர்ப்பது தேசவிரோதம் என்று முத்திரை குத்துவது ஜனநாயக இயக்கத்தை வேண்டுமென்றே நிறுத்த முயல்வதாகும்.

குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான் அது ஜனநாயகம் வெற்றி பெற்றதாக கருத முடியும். மாற்றுக் கருத்தும் எதிர்ப்பும்தான் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். அதை அங்கீகரித்து, ஊக்குவிக்க வேண்டும்.

தேசவிரோத வழக்கு சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக வாதிடமாட்டோம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றிய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். இந்த அரசியலைமைப்பு சட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானது. சில தீர்ப்புக்கள் மீது எனக்கு உடன்பாடில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அதுமட்டுமின்றி, நீதித்துறை அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். நீதித்துறை கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல” எனத் தெரிவித்தார்.

Also Read: “டெல்லியில் இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டம்” : மீண்டும் கல்வீச்சு மோதல் - 7 பேர் உயிரிழப்பு!