India

“இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும் மோடி ஆட்சியில் பொருளாதாரம் உயராது”- திட்ட கமிஷன் முன்னாள் துணை தலைவர் பேச்சு!

இந்திய பொருளாதாரம் கடந்த பல மாதங்களாக கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியப் பொருளாதார மதிப்பை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று மோடி அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் கூறிவருகின்றனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நடப்பு பொருளாதார நடவடிக்கைகள் காண்பிக்கின்றன. குறிப்பாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் சிதைந்துபோய் உள்ளன.

இதனால் தொழில் துறை நலிவடைந்து ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளது. அதன் எதிரொலியாக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியா குறித்த தனது மதிப்பீட்டை குறைத்துக் கொண்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க அமைச்சர்கள் கூறுவது போல, இந்திய பொருளாதார மதிப்பு 2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை என முன்பே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அதலபாதாளத்தில் இருக்கும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை என்று தெரிந்தும் வழக்கம்போல பட்ஜெட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என நிதியமைச்சர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் அதே வாக்கியதை அச்சுபிசகாமல் பேசி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இனி ஜி.டி.பி. மில்லியன் டன் அடிப்படையில் கணக்கிடப்படும்; இது பா.ஜ.கவின் புதுமையான கண்டுபிடிப்பு” என பேசினார். இதையடுத்து மக்கள் பா.ஜ.க அரசை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில், இன்றைய பொருளாதார சூழலின் அடிப்படையில் பார்த்தால், இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும், இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “மத்திய அரசு 2024-25 நிதியாண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

நாட்டின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதம் வரை இருந்தால்தான் அந்த இலக்கை எட்ட முடியும். ஆனால் தற்போது 5 சதவிகிதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதத்திலேயே நாடு சென்று கொண்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால், மத்திய அரசு கூறியுள்ளபடி 2024-25 நிதியாண்டுக்குள் அதனை எட்டுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை.

Also Read: நாட்டின் பொருளாதாரத்தை டன் கணக்கில் அளவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் !

இப்போது 4.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி நிலவரம் சற்று அதிகரித்து, அடுத்த ஆண்டில் 5 சதவிகிதமாகலாம். இது போதுமானது அல்ல. விரைவான வளர்ச்சி வேண்டும். குறிப்பாக 8 சதவிகிதத்திற்கு மேலான வளர்ச்சி நமக்கு இப்போது தேவை. அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ’முதலீடுகளே இல்லாதபோது 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என பா.ஜ.க சொல்வது சுத்தப் பொய்’ : SBI தலைவர் பேச்சு !