India

“அரசியலமைப்புச் சட்டமே எனது வேதம் என வேஷம் போடுகிறார்” : மோடியை கடுமையாகச் சாடும் திருமாவளவன்!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இடைவிடாது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் பா.ஜ.க அரசு ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற ஆர்.எஸ்.எஸ் கனவை நிறுவ முயற்சிக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் மதுரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்துப் மக்களையும் பாதிக்கும். அவர்கள் கேட்கும் ஆவணங்கள் இல்லாவிட்டால் இந்துக்களும் தடுப்பு முகாம்களுக்கு செல்லவேண்டும். ஆனால் அப்படி ஒரு நிலை உருவாக நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குத் தானே பாதிப்பு என கிறிஸ்தவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது. ஆளும் மோடி அரசு பிரிவினையை ஏற்படுத்தி கிறிஸ்துவர்களை மெல்ல பழிவாங்கும்.

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் எனது வேதம் என வேஷம் போடுகிறார். 2021ல் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இருக்கக்கூடாது என்பதே அவர்களது திட்டம். அதற்கான முயற்சி தான் குடியுரிமை திருத்தச் சட்டம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “6 இரட்டை வழிப்பாதைகளுக்கு வெறும் ரூ.6,000 ஒதுக்கீடு- மோடி அரசின் துரோகம் அம்பலம்”: சு.வெங்கடேசன் ஆவேசம்!