India
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் கொடுமையில் தமிழ்நாட்டின் அவலநிலை : கடந்த ஆண்டில் எத்தனை உயிர்ப்பலி தெரியுமா?
மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து அனைத்து மாநிலங்களும் இதனைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படாததால், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் கழிவுநீர் அகற்றும்போது 376 பேர் மரணம் அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 2015 முதல் 2019ம் ஆண்டு வரை 59 பேர் இறந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 49 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 39 மரணங்களுடன் குஜராத் 3வது இடத்திலும், கர்நாடகம் 35 மரணங்களுடன் 4வது இடத்திலும், டெல்லி 34 மரணங்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
இந்தத் தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவது எந்த அளவுக்கு சமூக அநீதியோ அதே அளவுக்கு அவர்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் பணி புரிய வைப்பதும் சமூக அநீதியே எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
மேலும், விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்க கழிவுநீர் அகற்றுவதில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
12,480 ஊராட்சிகள்.. 3 முக்கிய தேவைகளுக்கு உடனடி ஒப்புதல்: முதலமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம் !
-
“கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” : கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!
-
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு : பழிவாங்கும் ஒன்றிய அரசு!
-
தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகள் - 3 லட்சம் நுகர்வோர்கள் பயன் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!