India

வீடுகளில் குப்பை சேகரிக்க இனி வரி செலுத்தவேண்டும்: அ.தி.மு.க அரசின் திட்டத்தால் எரிச்சலில் சென்னை மக்கள்!

நாடு முழுவதும் சமீபகாலமாக வரி மற்றும் கட்டண உயர்வு மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. ஒரு அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வரி விதிப்பு அவசியம் என்றாலும், மிகக் கடுமையான வரிகளும், கட்டணமும் பொதுமக்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்கள், வரி, கட்டண உயர்வு காரணமாக விழிபிதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட் எகிறிக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக பா.ஜ.க அரசு பின்பற்றும் அதே பாணியை அ.தி.மு.க அரசும் தற்போது கையில் எடுத்துள்ளது. முன்னதாக பல மாவட்டங்களில் குப்பைக்கு வரி விதித்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நியில் சென்னையில் குப்பைக்கு வரி விதிக்கும் முறையை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடுமையாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு அரசும் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வீடுகளுக்கு 10 முதல் 100 ரூபாய் வரையும், வணிக நிறுவனங்களுக்கு 1,000 முதல் 5,000 வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு 300 முதல் 3,000 வரையும், தியேட்டர்களுக்கு 750 முதல் 2,000 வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 முதல் 3,000 வரையும், கடைகளுக்கு 500 முதல் 1,000 வரையிலும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாதம்தோறும் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 5,000 முதல் 20,000 வரையிலும், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு 2,000 முதல் 4,000 வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு 500 முதல் 3,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட கட்டணங்களையும், விதிகளையும் மீறினால் அதற்காக தனியாக அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். வீதிகளை மீறும் குற்றமாக பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால், 2,000 முதல் 5,000 வரையிலும், குப்பைகளை எரித்தால் 500 முதல் 2,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்புகள் மூன்று மாதத்திற்குள் அமலுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read: 2000 ஏழைகளின் குடிசைகளை அறிவிப்பின்றி இடித்த எடப்பாடி அரசு : நடுத்தெருவுக்கு வந்த சென்னை பூர்வக்குடிகள் !