India
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது யார்? : சரணடைந்த ஆதித்யா ராவ் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அந்தப் பையை கைப்பற்றி அதில் உள்ள வெடிகுண்டுகளை வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
இந்த வெடிகுண்டு பையை வைத்தது யார் என்று போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளின் அடிப்படையில் வெள்ளைத் தொப்பி அணிந்த ஒரு மர்ம நபர் பையை வைத்துவிட்டு ஆட்டோவில் ஏறிச் செல்வது போன்ற காட்சிகள் இருந்ததையடுத்து அந்த நபர் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு போலிஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெங்களூர் அல்சூர் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தானாக முன்வந்து சரணடைந்து அந்த மர்ம நபரை தான் தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன் என்றும் அவரிடம் மூன்று பைகள் இருந்ததாகவும் ஒன்றை மட்டும் விமான நிலையத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாகவும் போலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மர்மநபர் பெங்களூரு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அல்சூர் போலிஸார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் ஆதித்யா ராவ் என்பது தெரியவந்தது.
மேலும் ஆதித்யா ராவ் வைத்திருந்த இரண்டு பைகளில் என்ன இருந்தது என்பது குறித்தும், அவருக்கு பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் சதித்திட்டத்தை அரங்கேற்றியது ஏன் என்கிற கோணத்திலும் போலிஸார் தொடர்ந்து ஆதித்யா ராவை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
உடுப்பி, மணிப்பாலில் வசிக்கும் ஆதித்யா ராவ் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தையும், கடந்த 2018ம் ஆண்டில் மெஜஸ்டிக்கில் உள்ள சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தையும் வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான ஆதித்யா ராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு காவலர் பதவிக்கு தான் நியமிக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில் அரசை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!