India

“இவற்றைத்தான் தேசத்துரோகம் என்கிறது பா.ஜ.க அரசு” - ஹர்திக் படேலுக்கு ஆதரவாக பா.ஜ.கவை சாடும் பிரியங்கா!

படேல் சமூகத்தினருக்காக போராடும் ஹர்திக் படேலை பா.ஜ.க திட்டமிட்டு மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வருகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு படேல் சமூகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பேரணிக்கு ஹர்திக் படேல் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியின்போது வன்முறைகள் அரங்கேறின.

இதையடுத்து, அந்தப் பேரணிக்கு தலைமை வகித்த ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. இதற்கிடையே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், தேசவிரோத வழக்கில் ஹர்திக் படேல் ஆஜராகத் தவறியதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் நேற்று முன்தினம் போலிஸார் அவரைக் கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹர்திக் பட்டேல் மீது பா.ஜ.க மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்திக் தனது சமூக மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கிறார். இவற்றைத்தான் பா.ஜ.க அரசு ‘தேசத்துரோகம்’ என்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.