India

“Paytmல இருந்து பேசுறோம்... OTP நம்பர் சொல்லுங்க” - பாமர மக்களை குறிவைக்கும் வங்கி மோசடி கும்பல்!

வங்கி தொடர்பான மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. பாமர மக்களை தொடர்புகொண்டு வங்கி அதிகாரிகளைப் போல ஏமாற்றி தகவல்களைப் பெற்றுக்கொண்டு மோசடிகளில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

OTP எண்ணை வாடிக்கையாளரிடமே பெற்று, அதன் மூலம் செல்போனை ஹேக் செய்து, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடும் நூதன மோசடிகள் அரங்கேறுவது அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலிஸார் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் போலிஸார் கூறியதாவது, “சென்னையை சேர்ந்த குமரேசன் என்பவரது செல்போனுக்கு சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தியில், தங்கள் பேடிஎம் (Paytm) கணக்கில் அடையாள சான்று ஆவணங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும், அதனால் பேடிஎம் கணக்கு இன்னும் 3 நாட்களில் செயலிழந்துவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, குமரேசனை அழைத்த ஒருவர் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, KYC ஆவணங்களை கொடுக்க நீங்கள் அலையவேண்டாம். ‘ஸ்மார்ட்டர்’ என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து செல்போனுக்கு வரும் OTP-ஐ எனக்குச் சொல்லுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கூறியபடியே குமரேசனும் செய்துள்ளார். சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சியடைந்து புகார் தெரிவித்துள்ளார்.

Smarter என்பது, நம் செல்போனின் செயல்பாடுகளை மற்றொரு நபர் கண்காணிக்க ஒப்புதல் அளிக்கும் ஹேக்கர் செயலி. வெளியூரில் இருக்கும் ஒருவரின் கணினியில் பழுது ஏற்பட்டாலும், வேறொரு ஊரிலிருந்த படியே அதை இயக்கும் வகையில் இந்த செயலி பயன்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி, அடுத்தவரின் செல்போனை ஹேக் செய்து, தகவல்களை திருடி பணம் கொள்ளையடிக்கும் மோசடிகள் தற்போது நடக்கின்றன. எனவே, தேவையற்ற செயலியை யார் பதிவிறக்கம் செய்யச் சொன்னாலும் அதைத் தவிர்ப்பது நல்லது.” என அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: ‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி- பணப் பரிவர்த்தனை செயலி மூலம் ரூ.1.85 லட்சம் கொள்ளை!