India

“CAA-வுக்கு ஆதரவாக மிஸ்டு கால்?” : பா.ஜ.கவினருக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி!

மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க அரசு அதற்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்படி சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போர் 8866288662 என்ற எண்ணை அழைத்து தங்களின் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று பா.ஜ.க அறிவித்தது. அதுமட்டுமின்றி, அந்த எண்ணை பெண்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியாக பரப்பியும் அம்பலப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ.க-வினரின் இத்தகைய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரிந்தம் பட்டாசார்ஜி என்பர் ‘8866288662 என்ற எண் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்தால் உங்கள் செல்போனை ஹேக் செய்துவிடுவேன்’ என மிரட்டும் தொனியில் பதிவு ஒன்றை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

அவரின் இந்தப் பதிவால் எரிச்சலடைந்த பா.ஜ.கவினர் அவர் மீது பொய்ப் புகார் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் அரிந்தம் பட்டாசார்ஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து இதுதொடர்பான வழக்கு திரிபுரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், “சமூக வலைதளத்தில் பதிவிடுவது அடிப்படை உரிமை. இது அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்” எனக் கூறி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிமன்றம் வரை சென்றும் பா.ஜ.கவினரால் தங்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்கமுடியவில்லை. தவறான வழியில் பிரசாரம் செய்த பா.ஜ.கவினருக்கு இது தக்க பதிலடி என தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: கிளுகிளுப்பு காட்டி CAA-வுக்கு மிஸ்டு கால் ஆதரவு திரட்ட பா.ஜ.க-வின் கீழ்த்தரமான செயல்