India

"தி.மு.க. தலைமையிலான ஜனநாயக பாதுகாப்பு பேரணியில் பங்கேற்போம் வாருங்கள்" : இரா.முத்தரசன் அழைப்பு!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க குடியுரிமை சட்டத்தை தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேரணிக்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை நெறிகளை தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பா.ஜ.க மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பொது மக்கள் போராடி வருகின்றனர்.

காவல்துறையினரே அரசு வாகனங்களுக்கு தீ வைப்பது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை காட்சி ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆதரவாளர்கள், மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு எதிராக அறவழிப் போராட்டங்களை “வன்முறை’’ சித்தரித்து கருத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மங்களூரில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி இருவரை படுகொலை செய்துள்ளது. உ.பி மாநிலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மனித உயிர்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

எனவே, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சட்ட ரீதியாக சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அ.இ.அ.தி.மு.க அரசியல் உறுதியுடன் மாநிலங்களவையில் எதிர்த்து இருந்தால், இந்த மாபெரும் பாதகத்தை தடுத்திருக்க முடியும். ஆனால் கொள்கை உறுதியற்ற அ.இ.அ.தி.மு.க மக்கள் நலன்களுக்கு எதிரான திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து விட்டது.

Also Read: “ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்” - மாபெரும் பேரணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

நாட்டில் நடைபெறும் துயரங்களுக்கு பா.ஜ.க, அஇஅதிமுக பொறுப்பேற்க வேண்டும். மக்கள் உணர்வுகளை மதிக்காத, அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி வரும் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க அரசுகளை கண்டித்து, தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வருகிற 23.12.2019 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையில் கண்டனப் பேரணி நடத்துகிறது.

நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், ஜனநாயக உணர்வு கொண்டோர், மதச்சார்பற்ற கொள்கையாளர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என அனைத்துப் பகுதியினரும் கண்டனப் பேரணியில் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்