India

18,000 கோடி நஷ்டம் - 1 லட்சம் பேர் வேலை இழப்பு! : காஷ்மீர் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டப் பிரிவு நீக்கமும், ஜம்மு-காஷ்மீரை பிளவுபடுத்தியதையும் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான கட்டுப்பாடுகளை அப்பகுதி மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், காஷ்மீரில் இன்னும் பல இடங்களில் இயல்புநிலை திரும்பவில்லை.

அரசியல் கட்சித்தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உண்மையை படம் பிடிக்க ஊடகங்களுக்கு பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்படும் நிலை என காஷ்மீர் தொடர்ந்து பதட்டத்தின் வளையத்திற்குள்ளேயே இருக்கிறது.

தொடர்ச்சியான, நான்கு மாத காலம் ஊரடங்கு உத்தரவு என அடக்குமுறைகளால் காஷ்மீர் பொருளாதாரம் ரூ .17,878 கோடி அளவுக்கு இழப்புக்குள்ளாக்கியுள்ளது என்று காஷ்மீர் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய பா.ஜ.க., அரசின் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்ட இடையூறு காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான துறை வாரியான அறிக்கையை வெளியிட்ட காஷ்மீர் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (KCCI) 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜம்மு-காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இழப்புகள் மதிப்பிடப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் மொத்த மக்கள்தொகையில் 55 சதவீதத்தை உள்ளடக்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 120 நாட்களில் காஷ்மீரின் பொருளாதாரம் ரூ .17,878.18 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஒவ்வொரு துறையிலும் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் தனி நபர்களின் உண்மையான எண்ணிக்கை, வேலை மற்றும் நிதி இழப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, சுற்றுலாத் துறை அதன் பல்வேறு துணைத் துறைகளான டூர் ஆபரேட்டர்கள், வீட்டுப் படகுகள், ஹோட்டல்கள், சுற்றுலா போக்குவரத்து, ஷிகாராக்கள், சாகச விளையாட்டு மற்றும் பிற தொடர்புடைய துறைகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் போனி வல்லாக்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வழிகாட்டிகள் சந்தித்த இழப்புகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.தற்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் தங்கள் கடன்களை திரும்ப அடைப்பதற்கான திறனை இழந்துவிட்டனர். மேலும், கணிசமான எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் திவாலாகி உள்ளன.

பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் முடப்படும் நிலையில் உள்ளன.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஈ-காமர்ஸ் போன்ற இணையத்தை நேரடியாக சார்ந்திருக்கும் துறைகள் பாழாகிவிட்டன.

ஆப்பிள் வாங்குவதற்காக ரூ .8,000 கோடி ஒதுக்கப்பட்ட தோட்டக்கலைத் துறையில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக பீதி ஏற்பட்டு விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்புகளை மதிப்பிடுவதற்கோ அல்லது உதவியற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கோ எந்தவொரு தீவிரமான பயிற்சியும் மேற்கொள்ளப்படவில்லை சுற்றுலாத் துறை குழப்பத்தில் உள்ளது.

கைவினைக் கலைஞர்களும் நெசவாளர்களும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த துறைகளில் ரூ. 2,520 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி மோசமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை எதிர்பார்த்திருந்த மக்களை பெரும் பதட்டத்தில் ஆழ்த்திய மோடி அரசு தற்போது அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து உள்ளது.

நன்றி : பி.டி.ஐ