India

‘ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்’ : ஜெகன்மோகன் திட்டம் சாத்தியமா?

ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநிலமாக தெலங்கானா பிரிக்கப்பட்டதால் அதற்கு ஐதராபாத்தும், ஆந்திராவுக்கு அமராவதியும் தலைநகரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவுக்கான தலைநகரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியை தலைநகராக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

ஒரே பகுதியை முன்னேற்றுவதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிப்பது வீண் எனக் கூறிய அவர், அதனைக் கொண்டு ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை அமைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் மாற்றியமைக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரிப்பதன் மூலம் மூன்று நகரங்களும் வளர்ச்சி பெறுவதோடு அந்த நகரத்தை சேர்ந்த பகுதிகளிலும் முன்னேற்றம் ஏற்படும் என விளக்கமளித்துள்ளார். அதேசமயத்தில் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக மாற்ற பெரியளவில் செலவு ஏற்படாது என குறிப்பிட்டார்.

மேலும், தலைநகரம் அமைப்பதற்கான கமிட்டி ஒருவாரத்திற்குள் அறிக்கை வழங்கும் என்றும், அதற்கு பிறகு 3 தலைநகரங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

ஆனால் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டத்துக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேவைக்காகவும் மக்கள் ஒவ்வொரு நகரங்களுக்கும் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.