India

“அக். - டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமாகும்” : எச்சரிக்கும் ஜப்பான் ஆய்வு அமைப்பு!

இந்திய பொருளாதாரம் கடும் தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நலிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடி வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி ( ஏ.டி.பி - Asian Development Bank ) கணித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜப்பானைச் சேர்ந்த சேர்ந்த ஆய்வு நிறுவனமான ‘நோமுரா’ இந்தியாவின் ஜி.டி.பி குறித்த மதிப்பீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது. மேலும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிந்து, 4.3 சதவிகிதத்திற்கு இறங்கும் என்று ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நோமுரா வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமாக 4.3 சதவீதமாகக் குறையும். அதுமட்டுமின்றி, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறையில் நெருக்கடி நிலவுவதாகவும், நுகர்வு குறைந்து வருவதாலும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. எனினும் அடுத்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வளர்ச்சி வெறும் 4.7 சதவீதம் மட்டுமே உயரும் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

Also Read: “ஜி.டி.பி வெறும் 5.1% மட்டுமே இருக்கும் ; தெற்காசியாவிலேயே இந்தியாவின் நிலை படுமோசம்” : ஆசிய வங்கி தகவல்!

முன்னதாக கடந்த மாதமே, கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் மோடி அரசின் முடிவால், அரசின் வரி வருவாய் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும் என்று நோமுரா நிறுவனம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்தப் போகிறோம் என்று மோடி அரசு ஜம்பம் அடித்து வந்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, கடந்த சில ஆண்டுகளாக 5 சதவிகிதத்தைக் கூட தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.