India
“மோடி ஆட்சியில் 5 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை” : ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர்
இந்தியப் பொருளாதார மதிப்பை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று மோடி அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் கூறிவருகின்றனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நடப்பு பொருளாதார நடவடிக்கைகள் காண்பிக்கின்றன. குறிப்பாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் சிதைந்துபோய் உள்ளன.
இதனால் தொழில் துறை வளர்ச்சி நலிவடைந்து ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளது. அதன் எதிரொலியாக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியா குறித்த தனது மதிப்பீட்டை குறைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், “பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பா.ஜ.க அமைச்சர்கள் கூறுவது போல, இந்திய பொருளாதார மதிப்பு 2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை” என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் உரையாற்றியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, “தற்போதைய நிலைமையில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக உள்ளது.
இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரவேண்டும் என்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜி.டி.பி 9 சதவீதமாக இருக்கவேண்டும். ஆனால், தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூறுவதுபோல, 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமில்லை. வளர்ச்சி என்ற கேள்விக்கே வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சி மோசமாக உள்ளது. அதனால் 2019-20 நிதியாண்டிலும் 6 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி இருக்கும்.
குறிப்பாக, வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் தனிநபர் வருவாய் 12,000 டாலராக இருக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் அது 1,800 டாலராக மட்டுமே இருக்கிறது. தனிநபர் வருவாயில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.
எனவே, வளர்ந்த நாட்டின் தனிநபர் வருவாய் இலக்கை அடைய ஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை. அவ்வாறு 9 சதவிகித வளர்ச்சியைப் பெற்றாலும், 12,000 டாலர் வருவாயை எட்டுவதற்கே நமக்குக் குறைந்தது 22 ஆண்டுகள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!